- ‘ஒரு மழை இரவும் ஓராயிரம் ஈசல்களும்’ நூலிலிருந்து
இதோ கார்மேகத்தின் ஓரம் கிழிய
விழுந்துகொண்டிருக்கிறேன்
பூமித்தாயின்
புன்னகை முகம் நோக்கி….
நான் எங்கே விழுவது ?
அதோ அங்கே
காகிதக் கப்பலோடுக் காத்திருக்கும்
அந்த ஹைக்கூக் கவிதையின்
முதலெழுத்தாகவா ?
வற்றிக்கொண்டிருக்கும் அந்த
வைகையாற்றின்
வயிற்றுப் பகுதியிலா?
ஒற்றைக்காலோடு பூமியைப்
பற்றிக்கொண்டிருக்கும்
பச்சைப் புற்களின்
புன்னகைப் பற்களிலா ?
சட சடச் சங்கீத்தை
எனக்குள்
சுடச் சுடச் திணிக்கும்
இலைகளின் தலைகளிலா ?
வற்றாக்கடலின் ஓரத்தில்
ஒற்றைப்பாறையின் பல்லிடுக்கில்
சிங்கார வாய்திறந்து காத்திருக்கும்
அந்த சின்ன சிப்பியின் தாகத்திலா ?
இதழ்களின் இடைவெளியிலும்
கவிதை எழுதிக் காத்திருக்கும்
அந்த
வாசனைப் பூக்களின்
மகரந்த மடியினிலா ?
மரங்களும் மலைகளும்
மேகத்தை வாசித்துக் கொண்டிருக்கும்
அந்த
கானக சாலையிலா ?
விழிகள் விரிய விரியத் தேடுகிறேன்…
எனில் நனையக்காத்திருக்கும்
பூமியில் விழுந்து
நான் நனைய வேண்டும்
தயவுசெய்துக் காட்டுங்கள்
வயலுக்குள் உயிரைநட்டு
உயிருக்குள்
என் வருகைக்குக் காத்திருக்கும்
ஓர் விவசாயி நண்பனை …
நான் விடுத்த பதில்
விழுந்து வீ ணாக வேண்டாம்.
அது அங்கேயே இருக்கட்டும்.
மனிதர்கள் திருந்தும் வரை.
No comments:
Post a Comment